ராமர் பலம் வர்ணம் பூசிய சேது சமுத்திர திட்டம்: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அறிக்கை

Adams bridge sethusamudram

தி.மு.க பெயர் எடுத்துவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே மக்கள் வரிப்பணம் பல கோடி செலவு செய்த பிறகு சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

சேது சமுத்திர திட்டம்

இது குறித்து தி.மு.க தலைவர் மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்:

இந்திய தீபகற்பம் 3,554 கடல் மைல் தூரத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. எனினும், இப்பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்வதற்குரிய வசதி இல்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள தூத்துக்குடி செல்வதற்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது.

ஏனெனில், இந்தியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் மணல் பாறைப் பகுதிகள் அமைந்துள்ளன. இது, ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் சராசரியாக 11 அடி அளவுக்கே உள்ளது. இந்த குறைந்த ஆழம் காரணமாக கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது. கப்பலின் பயண தூரத்தைக் குறைப்பதற்காக இந்திய கடற்பகுதிக்குள் கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படும் வகையில், சேது சமுத்திரக் கால்வாய் வெட்டுவதற்கு 1860-ம் ஆண்டு முதல் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மத்திய அரசு 1955-ம் ஆண்டில் சர் ஏ.ராமசாமி முதலியாரை தலைவராகக் கொண்டு சேதுசமுத்திரத் திட்டக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு, இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரைக்கு ஆழ்கடல் கப்பல்கள் வந்துசேர ஆடம்ஸ் பாலம் அருகில் ஒரு கால்வாய் வெட்டி மன்னார் வளைகுடாவையும், பாக் ஜலசந்தியையும் இணைப்பதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்தது.

தூத்துக்குடியை ஆழ்கடல் துறைமுகம் ஆக்குவதற்கு இந்தக் கால்வாய் துணைபுரியுமா என்பது குறித்தும் ஆராய்ந்தது. இதன் பயனாக, தூத்துக்குடி துறைமுகம் வெற்றி பெற வேண்டுமென்றால் சேதுக் கால்வாய்த் திட்டம் அவசியமென்று இக்குழு கருதியது. விரிவான ஆராய்ச்சி, கவனமான மதிப்பீடு ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் சாத்தியமானது என்றும், நன்மை பயக்கக் கூடியது என்றும், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயே இத்திட்டத்தினை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும், 1956 -ம் ஆண்டில் சர் ஏ. ராமசாமி முதலியார் குழு பரிந்துரை செய்தது. இத்திட்டம் நிறைவேற்றப் படுவதன் மூலம் சென்னை தூத்துக்குடி கடல் வழி பயணத்திற்கு 360 கடல் மைல் தூரம் குறையும் என்றும், பயண காலத்தில் ஒன்றரை நாள் மிச்சமாகும் என்றும் இக்குழு தெரிவித்தது. எனினும், சேதுக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

2004-ம் ஆண்டு மத்தியில் தி.மு.க. இணைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகு தான், சேது சமுத்திரத் திட்டம் 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏறத்தாழ 150 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறக் கூடிய நாளாக 2.7.2005 அமைந்தது. 2.7.2005 அன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சோனியாகாந்தியும், நானும் முன்னிலை வகித்தோம். சேது சமுத்திரக் கால்வாய் வெட்டும் பணி தொடங்கி சிறப்பாக நடைபெறவும் தொடங்கியது.  ஆனால் திட்டம் தொடங்கி, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் இந்தத் திட்டத்திற்காக செலவிடப்பட்ட பிறகு, இத்திட்டம் நடைபெற்று விட்டால், தி.மு.க.வுக்கு பெயர்வந்து விடுமே என்ற ஒரே காரணத்திற்காக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டைபோடுவதற்கு பல்வேறு முயற்சிகளிலே ஈடுபடுகிறார்கள்.

ராமர் பாலம் என்றெல்லாம் அதற்கு வர்ணம் பூசி மதப் பிரச்சினைகளை ஏற்படுத்த முயலுகிறார்கள். ராமர் சேது பாலம் எதுவும் அந்தப் பகுதியில் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை என்றும், எந்தவொரு தொல்லியல் ஆராய்ச்சியும் இப்படி ஒரு பாலம் இருந்ததாக உறுதி செய்யவில்லை என்றும் திட்டவட்டமாக மத்திய அரசின் சார்பில் மாநிலங்களவையில் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி எழுத்துப் பூர்வமான பதிலிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்ட சுற்றுச் சூழல் கண்காணிப்புக் குழு தலைவர் டாக்டர் எஸ்.கண்ணையன் 25-4-2007 அன்று செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ராமர் பாலம் என்றழைக்கப்படும் ஆதாம் பாலத்தின் 70 இடங்களில் 20 மீட்டர் ஆழத்துக்கு பாறை மாதிரிகளை ஜியோ கெமிக்கல் முறையில் சோதனை செய்தோம். அதில், கடலில் உள்ள படிமங்கள்தான் உள்ளன. அறிவியல் ரீதியாக ராமர் பாலத்தை மனிதர்கள் உருவாக்கியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. பாலம் இருக்கும் இடத்திற்குப் பதிலாக வேறு இடத்தில் கால்வாய் தோண்டினால், மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் 26 தீவுகளும் அழிந்து விடும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் ராமர் பாலம் இருப்பதற்கான ஆதாரமாக செயற்கைக்கோள் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டிருப்பதாகக் கூறினர். ராமர் பாலம் இருப்பதாக நாசா படங்களை வெளியிட்டதாகக் கூறுவதில் உண்மை இல்லை என்று அப்போதே மறுத்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு., நாசா அமைப்புக்கே மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது குறித்து நாசா எந்தவிதமான பதிலும் அனுப்பவில்லை என்றும் அப்போதே விளக்கினார்.

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ராமநாதபுரத்தில் அளித்த பேட்டியில் ஒட்டு மொத்த இந்து மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தில் தனுஷ்கோடி கடலில் ராமர் பாலம் இருப்பதாக பிரச்சினையை கிளப்புகிறார்கள். அந்தக் கடல் பகுதியில் மனித கட்டமைப்புகளால் உருவாக்கப்பட்ட பாலம் இருந்ததாக துளி அளவு கூட ஆதாரம் இல்லை. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 81 இடங்களில் கடலுக்குள் ஆழ் துளை சோதனை நடத்திப் பார்த்ததில் பாலம் இருந்ததற்கான அடிப்படை ஆதாரமோ, சுற்றுச் சூழல் பாதிப்போ இல்லை. இந்து மக்களின் மனம் புண்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதற்கான அறிவியல் ஆய்வு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. டெல்லியில் இந்து மத சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டினோம். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர். என்று தெளிவாக்கினார்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Adams bridge sethusamudram

To Buy and Sell properties in Chennai, Please contact best square feet

Related posts