கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பல வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் படுகாயம் அடைந்தார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் மீது விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மோதல் சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர்களுக்கு எதிராகவும், காவல் துறையினருக்கு ஆதரவாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கறிஞர்களுக்கு எதிரான இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 31 வழக்கறிஞர்களும் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், வழக்கறிஞர்களுக்கு எதிராக பாரபட்சமான முறையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இடைக்கால குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டியும், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டியும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் மகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது, அதில் மோதல் சம்பவம் தொடர்பாக ஐந்து காவல் துறையினர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வழக்கில் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சாட்டி வாதிட்டார்.
இவ்வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கறிஞர்களுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் சிபிஐ பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.