சென்னை, மார்ச் 19 இரயில்வே நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப் பட்டதற்கான நடவடிக்கைகள் பற்றி தெற்கு இரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள் கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சார்ந்த பிரபாகர் தாக்கல் செய்துள்ள மனு: தெற்கு இரயில்வேக்கு சொந்தமான சொத்துகளை சில தனியார் அமைப் புகள் தவறாகப் பயன்படுத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றம் பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்க தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் இரயில் நிலைய வளாகத்தில் சில அமைப்புகள் சார்பாக அரசியல் தலைவர்கள், தனியார் அமைப்பு தலைவர்களை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் போர்டு, பேனர்களை தற்காலிக மாகவும், நிரந்தரமாகவும் வைக்கப்பட்டுள்ளது. இவைகளால் இரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகிறது. மேலும் இரயில்வே துறைக்கு சொந்தமான சுவர்களில் விளம்பரங்கள் வரைந்துள்ளார்கள். இதற்கு வாடகையோ, கட்டணமோ செலுத்துவது கிடையாது. எல்லா இரயில் நிலையங்களின் நுழைவுவாயிலில் வைக்கபட்டுள்ள பிளக்ஸ் போர்டு, பேனர், மற்றும் சுவர் விளம்பரங்களை அகற்ற வேண்டும். மேலும், இரயில்வே நிலத்தில் பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்கவும் சுவர் விளம்பரங்களைச் செய்யவும் இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் என். கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் பொது இட ஆக்கிரமிப்புத் தொடர்பான சட்டம் இரயில்வே நிர்வாகத்திற்கு பொருந்துமா எனவும், இரயில்வேக்குச் சொந்தமான இடங்கள் எவ்வளவு, ரயில்வே கட்டடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளனவா, என்றும் அதனை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார், இரயில்வே நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும் இது பற்றி தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து, வழக்கை மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்.
News Headline: