actor kamal hassan vishvaroopam high court order
நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியப் போட்டி (வர்த்தகம்) கமிஷனில் ராஜ்கமல் திரைப்பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.ல் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிடுவது இல்லை என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் காரணமாக படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போய்விட்டது என்றும் அந்தப் புகாரில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தீர்மானம் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் எங்கள் சங்கத்தின் பதிவு எண் மற்றும் முகவரி இடம்பெற்றுள்ளது. விஸ்வரூபம் படத்தை திரையிட மாட்டோம் என்று எங்கள் சங்கக் கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் இன்னொரு சங்கத்தின் பெயரில் எங்கள் சங்கப் பதிவு எண்ணை இடம்பெறச் செய்து போலியான ஆவணங்களை சிலர் உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தோம். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, எங்கள் புகார் குறித்து சட்டப்படி விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.
இந்த மனு மீது விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி எம்.வேணுகோபால் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டார். அப்போது, இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் இம்மாதம் 22-ஆம் தேதிக்குள் உரிய பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.