விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரசு புறம்போக்கில் குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு 3 ஆண்டுகள் முடிந்தும், வருவாய்த் துறையினர் வீடுகளை இன்னும் ஒதுக்கவில்லை என புகார்கள் கூறப்படுகின்றன.
சிவகாசி -வெம்பக்கோட்டை சாலையில் மயானப் புறம்போக்கில் பலர் வீடுகள் கட்டி, அதற்கு ராணி அண்ணா காலனி என பெயர் சூட்டி குடியிருந்து வந்தனர். கடந்த 2005 ஆம் ஆண்டில், நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தைக் காலி செய்யுமாறு இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின்னர், கட்டடங்களை இடித்து அங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அதையடுத்து, அண்ணா காலனி குடியிருப்புவாசிகள் மற்றும் சில கட்சியினர் சேர்ந்து, இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். கடந்த 2015 மார்ச் 9 ஆம் தேதி, அண்ணா காலனி குடியிருப்புவாசிகளுக்கு ஆனையூர் ஊராட்சிப் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் கடந்த 2015 மே 14 ஆம் தேதி, இவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டு, சிவகாசி சார்-ஆட்சியருக்கு கடிதம் எழுதினார். கடந்த 2015 நவம்பர் 5 ஆம் தேதி சார்-ஆட்சியர் அமர்குஷ்வாஹா, சிவகாசி நகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். நகராட்சி நிர்வாகம் 2015 டிசம்பரில் ராணி அண்ணா காலனியில் வசித்து வந்த 54 பேரை கண்டறிந்து, அவர்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல்களைப் பெற்று பட்டியல் தயாரித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகாசி சார்-ஆட்சியருக்கு அனுப்பிவைத்தது.
இந்த பட்டியல் அனுப்பி வைத்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், வருவாய்த் துறையினர் இதுவரை இவர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்யவில்லை.
ஆனையூர் ஊராட்சியில், குடிசை மாற்று வாரியத்தால் 176 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், பெரியார் காலனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட 83 பேர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளை, ராணி அண்ணா காலனி குடியிருப்புவாசிகளுக்கு ஒதுக்கவேண்டும். ஆனால், இதுவரை வீடுகள் ஒதுக்கப்படவில்லை என அவர்கள் புகார் கூறுகின்றனர்.
ஆனால், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன் தெரிவித்துள்ளார்.