சென்னை: தனது விவாகரத்து வழக்கில் தீர்ப்பை மாற்றம் செய்ய கோரி நீதிபதியிடம் பெண் ஒருவர் வாக்குவாதம் செய்தார். இந்த சம்பவத்தால் குடும்ப நல நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் செய்த பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான விவாகரத்து மற்றும் குடும்ப பிரச்சனைகள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் குடும்ப நல நீதிமன்றங்கள் இருக்கின்றன. இதில் குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் நேற்று காலை விவாகரத்து வழக்கு ஒன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான பெண் ஒருவர், ‘‘தவறான தீர்ப்பு வழங்கி விட்டீர்கள்… அதனை மாற்றி வழங்குங்கள்… என சத்தமாக நீதிபதியிடம் முறையிட்டார். இதனைக் கேட்ட நீதிபதி, ‘‘நீங்கள் உயர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்’’ என்று கூறினார். ஆனால், அந்த பெண், ‘‘நீங்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் ஏன் அங்கு செல்ல வேண்டும்,’’ என்று கேட்டார்.
மேலும், ‘‘எனக்கு நியாயம் கிடைக்காமல் நான் இங்கு இருந்து போக மாட்டேன்’’ என சொல்லி பிடிவாதமாக நீதிமன்றத்தின் உள்ளேயே நின்றிகொண்டிருந்தார். அதனால், அங்கு பரபரப்பும் பதற்றமும், ஏற்பட்டது. நீதிபதி அப்பெண்ணை வெளியே போகும் படி கேட்டுக்கொண்ட போதிலும் அந்த பெண் வெளியே போகாமல் நின்றுகொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர். அந்த பெண்ணை வெளியே அழைத்து வந்து சமாதானம் செய்தார்கள். பின்னர் நீதிமன்றம் சார்பில் அந்த பெண் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற காவல்நிலைய போலீசார், அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்கள் . பின்னர் செந்த ஜாமீனில் அந்த பெண் விடுவிக்கப்பட்டார்.
News Headline: