காணாமல் போன சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்கும் சிபிசிஐடி காவல்துறை சரியாக பாதையில் சென்று போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முகிலனை மீட்பதற்காக மேலும் எட்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவண படத்தை வெளியிட்ட சுற்றுசுழல் ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூன் 6ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகிலன் மாயமானது தொடர்பான வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக, சிபிசிஐடி தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் மூன்றாவது முறையாக மூடி முத்திரையிடப்பட்ட உறையில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முகிலன் வட இந்தியாவில் இருப்பதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், முகநூல் பக்கத்தில் முகிலன் எங்கே என வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு போட்ட பதிவுக்கு, ராஜபாளையம் காவல் ஆய்வாளர் முகமது கவுஸ், என பதிலளித்துள்ளதாகவும், இது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் வழக்கறிஞர் அச்சம் தெரிவித்தார்.
பின்னர் அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், சிபிசிஐடி போலீசார் அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.விசாரணை புதிய புதிய கோணத்தில் நடந்து வருவதாகவும், ஒவ்வொரு முறையும் புதுபுது தகவல்கள் கிடைத்து வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த அறிக்கை வழக்கின் விசாரணை பாதிக்கும் என்பதால் இந்த அறிக்கையில் உள்ள விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
English headlines: