sri lankan cricketer ranathunga
ஐ.பி.எல் தொடரால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவமானம் தான் கிடைத்தது என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார்.
சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த வீரர்கள் புக்கிகள் என்று பலர் கைதாகினர். இத்தொடர் குறித்து மக்களிடம் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையின் ரணதுங்கா கூறுகையில், ஐ.பி.எல் தொடரில் பிக்சிங் நடந்ததை அறிந்து அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில், இம்மாதிரியான சம்பவங்கள், தொடக்கத்தில் இருந்தே நடந்து கொண்டுள்ளன.
இத்தொடரால் ஊழல் அதிகரிக்கும் என, ஐ.சி.சி., ஊழல் தடுப்பு அதிகாரி பால் கான்டன், 2008 ம் ஆண்டில் எச்சரித்தார்.
அவர் சொன்னது போலவே, ஒவ்வொரு ஆண்டும் பெட்டிங், பிக்சிங், போதை என்று ஏதாவது ஒன்று நடக்கத்தான் செய்கிறது. ஐ.பி.எல் தொடரால், இந்திய கிரிக்கெட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. உலக கிரிக்கெட்டுக்குத் தான் அவமானம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் வீரர்களுக்கு இதிலிருந்து வருமானம் கிடைப்பதால் தடை செய்யக்கூடாது என்கின்றனர். பிரசன்னா போன்ற ஒரு சிலர் தான் குற்றம் சுமத்தி பேசுகின்றனர்.
பணம் காரணமாக அனைவரும் இதில் விளையாட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஒவ்வொரு வீரர்களின் கவனத்தை சிதறடித்து பேராசைக்காரர்களாக மாற்றியுள்ளது.
இதிலிருந்து, உலகத்தரம் வாய்ந்த எந்த வீரரும் உருவானதாக தெரியவில்லை. கவாஸ்கர், சச்சின், டிராவிட் போன்ற வீரர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.,) உள்ளூர் கட்டமைப்பே சிறப்பாகத்தான் உள்ளது என்றும் இதுவே, நல்ல வீரரை உருவாக்க போதுமானது என்ற நிலையில், இத்தொடருக்கு என்ன தேவை வந்தது என்றே தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.