Right To Information Act in India : Political parties under the Right
2013 ஜூன்.4 : காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுக்கு எவ்வளவு நிதி உள்ளது மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தகவல்களை இந்த சட்டத்தின் கீழ் மக்கள் பெறலாம் என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு கூறியுள்ளது.
மத்திய தகவல் ஆணையம்முன்னதாக சீர்திருத்தம் என்ற அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மனு ஒன்றை அளித்திருந்தார்கள். சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் ஜனநாயகத்துக்கான சீர்திருத்தம் என்ற அமைப்பை சேர்ந்த அனில் பெய்ர்வால் ஆகியோர் மத்திய தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு : காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய தேசிய கட்சிகள் ஏராளமாக நன்கொடைகள் பெறுகின்றன. இந்த நன்கொடைகள் யார் யாரிடமிருந்து கிடைத்தன என்பது பற்றிய விவரத்தை அளிக்கும்படி இந்த கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் இந்த ஆறு கட்சிகளுமே, நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் வரவில்லை. எனவே நன்கொடை விவரங்களை தெரிவிக்க முடியாது என கூறின. இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர், சத்யானந்த மிஸ்ரா, ஆணையர்கள், எம்.எல்.சர்மா, அன்னபூர்னா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய முழு,பெஞ்ச் விசாரணை நடத்தியது.
அப்போது தங்கள் தரப்பு வாதத்தை நியாயப்படுத்தி அனில் பெய்ர்வால் வாதிட்டதாவது : இந்த அரசியல் கட்சிகள் மத்திய அரசிடமிருந்து பல்வேறு வழிகளில் மறைமுகமாக கணிசமான அளவில் நிதி உதவி பெறுகின்றன. டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் மிக முக்கியமான பகுதிகளில் பெருமளவிலான அரசு நிலங்கள் மிக குறைந்த விலையில் இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் அரசுக்கு சொந்தமான அலுவலகங்களும் சலுகை விலையில் இந்த அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்த கட்சிகளை கொண்டு வர வேண்டும். செலவு, நன்கொடைகள் பற்றிய பொதுமக்களின் கேள்விகளுக்கு இந்த கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு பெய்ர்வால் வாதிட்டார்.
இதையடுத்து தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு : சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி செலுத்துவதில் குறிப்பிட்ட சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரங்களில் அரசுக்கு சொந்தமான ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் டிவி போன்றவற்றில் இலவசமாக பிரசாரம் செய்வதற்கும் இந்த கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. மேலும் அரசிடமிருந்து மறைமுகமாக கணிசமான அளவில் இந்த கட்சிகள் நிதி உதவி பெறுகின்றன. அரசியல் கட்சிகளின் செலவு கணக்குகளை அறிந்து கொள்வதற்கு, பொதுமக்களுக்கு உரிமை உள்ளது என, சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்துள்ளது. எனவே காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதில் எந்தவித மாற்றுக் கருத்தும் எங்களுக்கு இல்லை. பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய உரிமை இந்த கட்சிகளுக்கு உண்டு. இந்த கட்சிகளின் தலைவர்கள் பொதுச் செயலர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக, தனியாக ஒரு நிர்வாகியை, கட்சியின் தலைமையகத்தில் ஆறு வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும். இந்த நிர்வாகி பொதுமக்களின் கேள்விகளுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய தகவல் ஆணையர்கள் உத்தரவிட்டனர்.