4 accused arrested in auditor ramesh murder case
நெல்லை,ஜூலை28:ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்ட நிலையில், சேலத்தில் பாஜக மாநில பொது செயலர் ஆடிட்டர் கடந்த 19ம் தேதி மரவேனரி கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த போது மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏற்கனவே போலீசார் கொலை குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய சிபிசிஐடி டிஜிபி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இதில், கொலை வழக்கு குற்றவாளியாக மதுரையை சேர்ந்த போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக், மேலபாளையத்தை சேர்ந்த பன்னா இஸ்மாயில், நாகூரை சேர்ந்த அபுபக்கர் ஆகிய நால்வரை போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரை சேர்ந்த பீர் மொய்தீன், மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான் புகாரி, பசீர் ஆகியோர் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு முகாமிட்ட போலீசார் கிச்சான் புகாரியின் கூட்டாளிகளான கட்ட சாகுல், பஷீர், குட்டி, பாசில் ஆகியோரின் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 145 டெட்டனேட்டர், 145 ஜெலட்டின் குச்சிகளையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து இவர்களிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.