ஊடகத்துறை தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்குத் தண்டனை அளிக்காத நாடுகள் பட்டியலில், இலங்கை 4 ஆம் இடத்தில் இருப்பதாக ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு (சி.பி.ஜே) இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது, அதில் கடந்த 10 ஆண்டகளில் 100க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்ட போதும், அதில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை தண்டிக்காத ஈராக் முதலிடத்தை பிடித்துள்ளது. இதேபோல் சோமாலியா இரண்டாம் இடத்தையும், பிலிப்பைன்சு மூன்றாவது இடத்தை வகிக்கின்றன.
இராணுவம் தொடர்பான செய்தியை வெளியிட்டதற்காக கொல்லப்பட்ட செய ஐயாத்துரை நடேசன் மற்றும்
செய்தியாளர் லசந்த விக்கிரமதுங்க உட்பட 9க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருடைய மரணத்துக்கும் காரணமானவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை, இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு (சிபிஜே) வெளியிட்டுள்ள குறிப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்திருந்த போதிலும், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச செய்தியாளர்களின் கொலைகளுக்குத் தண்டனை பெற்று தர விரும்பபில்லை என்றும்,. பல செய்தியாளர்களின் கொலைகளுக்குப் பின்புலத்தில் இலங்கை அரசும்,மற்றும் இராணுவ அதிகாரிகளே இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 13 நாடுகள் பட்டியலில் சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, நைஜீரியா, மற்றும் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.