தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பி.சீதாராமன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் ஆர்,கிர்லோஷ் குமார் மாற்றப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டார்.
தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், மோகன் பியாரே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளரானார். மறு உத்தரவு வரும்வரை, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளராக மோகன் பியாரே முழு பொறுப்பு வகிப்பார்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழக கமிஷனர் டி.பிரபாகர ராவ், போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். பயிற்கள் மற்றும் தோட்டக்கலை கமிஷனர் சத்யபிரதா சாகு, போக்குவரத்துக் கழக கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் டி.கார்த்திகேயன், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதவியான தொல்பொருள் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.
மாநில அரசுப் பணிக்கு திரும்பியுள்ள பிரதீப் யாதவ், சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கமிஷனராக மாற்றப்படுகிறார். கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் கூடுதல் பதிவாளர் வி.கலையரசி, நில சீர்திருத்தங்கள் இயக்குனராக மாற்றப்படுகிறார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் இணைச் செயலாளர் டி.ஆபிரகாம், கால்நடை பராமரிப்பு இயக்குனராக மாற்றப்படுகிறார். வணிகவரிகள் முன்னாள் இணை கமிஷனர் ஆர்.லில்லி, வருவாய் நிர்வாக (பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் துடைப்பு) இணை கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.
மாநில அரசுப் பணிக்கு வரும் தேசிய மருந்துகள் துறையின் கீழ் வரும் தேசிய மருந்து விலை நிர்ணயக் கழகத் தலைவர் சந்திர பிரகாஷ் சிங், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வு கமிஷனராக கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்படுகிறார்.
மீன்வளங்கள் இயக்குனர் சி.முனியநாதன், கருவூலம் மற்றும் அக்கவுண்ட்ஸ் இயக்குனராக மாற்றப்படுகிறார். கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் முன்னாள் செயல் இயக்குனர் பெல்லா ராஜேஷ், ஜார்க்கண்டு மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுப் பணிகளுக்கு மாற்றப்படுகிறார். அவர் மீன்வளங்கள் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் பெல்லா ராஜேஷ் பணியாற்றுவார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைச் செயலாளர் சி.டி.மணிமேகலை, சமூக பாதுகாப்பு இயக்குனராக நியமிக்கப்படுகிறார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் கமிஷனர் மீனாட்சி ராஜகோபால், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் (பயிற்சி) கமிஷனராக முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு சுற்றுலா கமிஷனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கே.ஸ்கந்தன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் அவர் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பை, மறு உத்தரவு வரும்வரை தொழில் துறை முதன்மைச் செயலாளர் சி.வி.சங்கர் வகிப்பார்.
சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.கண்ணன், சுற்றுலா கமிஷனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகிய பதவிகளில் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.