ஆல்ஃபிரடோ… அதிகாலை 6 மணி முதல் பால் கறக்கும் வேலையைச் செய்வார். வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்குப் போகமாட்டார். மாறாக ஸ்வீடன் சிறைச்சாலைக்குத்தான் செல்வார்.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில், மேரிஸ்டாட் என்ற நகரில் இயங்குகிறது திறந்தவெளிச் சிறைச்சாலை, இதன் பெயர் ரோட்ஜன். இங்கு 60 சிறைக் கைதிகள் வேலை செய்கிறார்கள்.
இவர்கள் பண்ணையிலிருக்கும் பசு மாடுகளை பராமரிப்பது, தோட்ட வேலைகள், வேலிகளை பாதுகாத்தல் போன்ற வேலைகளைச் செய்கிறார்கள்.
இந்த விவசாய சிறைச்சாலையில் வேலை பார்க்கும் அனைவரும் ஸ்வீடனில் குற்றவியல் சட்டத்தின் படி தண்டனை பெற்றவர்கள். குற்றவியல் தண்டனை பெற்றவர்கள் தங்களின் தண்டனை காலத்தின் மூன்றில் இரண்டு பங்கு நேரத்தை விவசாய பண்ணைகளில் வேலை செய்ய வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டம்.
“தண்டனை என்பது குற்றவாளிகள் செய்த தவறை உணரும் காலம் மட்டுமல்ல. அவர்களின் வாழ்வை மறு சீரமைக்கவும் வேண்டும்’’ என்று ஸ்வீடன் அரசு தண்டனைக்கு மாற்று விளக்கத்தை முன்வைக்கிறது.
ஸ்வீடனில் 12-க்கும் அதிகமான விவசாய சிறைகள் இருக்கின்றன. விவசாயப் பண்ணைச் சிறைகளின் தலைவர் பிரிட் மரியா ஜான்சன், “சிறைதண்டனை முடிந்து செல்பவர்கள் சமூகத்திற்கு நல்லவழியில் செல்ல வேண்டும். மீண்டும் தண்டனை பெற்று சிறைக்கு வரக்கூடாது.
விவசாயப் பண்ணைகளில் கண்காணிப்பு கேமராக்களோ, பண்ணையின் கேட்களை அடைப்பதோ இல்லை. காலையும் மாலையும் சிறைக்கைதிகளை எண்ணுவோம் யார்யார் எங்கு வேலை செய்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம்’’ என்கிறார் பிரிட் மரியா ஜான்சன்.
”சிறைக் கைதிகள் இதற்கு முன்பு செய்யாத பணிகளைக்கூட குறைந்த நாள் பயிற்சியில் சிறப்பாக செய்கின்றனர். இந்தப் பண்ணை, 2012-ம் ஆண்டு பாலின் தரத்திற்கான விருதினையும் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணம், பண்ணைகளில் தினசரி வேலைகளை திட்டமிட்டு செய்வதுதான்’’ என்கிறார் விவசாயப் பண்ணையின் மேனேஜர் மிக்சல் ஹெனிங்ஷன்.
உலகிலேயே மிகக் குறைவான சிறைக்கைதிகள் இருக்கும் நாடுகளில் ஸ்வீடனும் ஒன்று. இங்கு 1000க்கு 0.5% மக்கள் மட்டுமே சிறையில் இருக்கின்றனர். 1சிறைக்கைதிகளுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் தொழில்சார் பயிற்சிகளையும் வழங்குகிறது ஸ்வீடன் அரசு.
Source Courtesy: News 18