சட்டவிரோதமாக கைது செய்யும் விவகாரம்: மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுககு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! மாணவர் இக்குற்றத்தில் ஈடுபட்டார்களா என விசாரிக்காமல், சட்டவிதிகளை மீறி காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
மேலும் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் மாஜிஸ்திரேட்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட தயங்காது என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செம்மரக் கடத்தல் வழக்கில் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்ட மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரரான பொறியியல் மாணவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்ததற்காக, மனுதாரர் கைது செய்யப்பட்டதாக, மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்டு மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ’மாணவர் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என விசாரிக்காமல், சட்டவிதிகளை மீறி காவல் துறையினர் கைது செய்திருக்கிறது தெரிகிறது. மாணவரின் கைது அவருக்கு மட்டுமின்றி, குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.
மேலும், சட்டவிரோத கைது எனப்படுவது மிக மோசமான தனிநபர் உரிமை மீறல். கைது செய்யும் போது உரிய விதிகளை பின்பற்றும்படி, காவல் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போதும், விதிகளை மீறி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகச்சுட்டிக்காட்டினார்.
இதுபோல சட்டவிரோத கைதுகளை மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டவர்களை இயந்திரத்தனமாக சிறையிலடைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்களுக்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட இந்த நீதிமன்றம் தயங்காது எனவும் நீதிபதி மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.