மதுரை: ‘அரசாங்க சம்பளம் பெற்று, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு தொடுத்து, துாக்கில் போட வேண்டும். மேலும் அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்’ என்று, உயர்நீதிமன்ற, மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது.
மதுரை, சூர்யா நகர் பரணிபாரதி தாக்கல் செய்துள்ள பொதுநல மனு பின்வருமாறு:
தமிழக மின் வாரியத்தில், 325 உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களுக்கு, 2018 டிச., 30ல் எழுத்து தேர்வு நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலை, தேர்வு நடத்தியது. வினாத்தாள் வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அண்ணா பல்கலை விசாரணை நடத்தியது.
பின், அரசின் இணையதளத்தில் வினாத்தாள், கீ பதில்களுடன் தேர்வு முடிவுகள் வெளியாகின. 1,575 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன.
வினாத்தாள் வெளியானது பற்றி, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். தேர்வு மற்றும் நியமன நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.
நீதிபதி கிருபாகரன்: தேர்வு முடிந்து, வினா மற்றும் விடைத்தாள்களை திரும்பப் பெற்றுக் கொள்கின்றார்கள். இந்நிலையில், எப்படி வினாத்தாள் வெளியானது? 120 வினாக்களை நினைவு வைத்து, ஒருவராக எழுதி வெளியிட முடியாது.
இந்த முறைகேட்டிற்கு, அண்ணா பல்கலையைச் சேர்ந்த, ஏதாவது ஒரு ஊழியர் உடந்தையாக இருந்திருக்கலாம். அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு, சிலர் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றார்கள். லஞ்சம் அனைத்துத் துறைகளிலும் இருக்கிறது.
அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு, லஞ்சம் பெரும் அலுவலர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து. துாக்கில் போட வேண்டும். மேலும் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். இதனால், லஞ்சம் குறையும் என கூறினார்.
மேலும், நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் தேர்வு நியமன நடைமுறைகள் சம்பந்தப்பட்ட, எந்தவித மேல்நடவடிக்கையும் அரசு மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. விசாரணை, மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.