புதுடெல்லி:தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் போராட்டம் நடைபெற்றது . போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள் . பலியானதை தொடர்ந்து, ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ,சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்தது.இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது .இந்த மனுவில் “தாக்கல் செய்த மனுவை விசாரிக்க போதிய நேரம் இல்லை” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளதால் , பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது .இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் வரை இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.