ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை தாக்கிய போலீஸார்: மன்னிப்பு கடிதத்துடன் ரூ.1001 வழங்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு சம்பந்தப்பட்ட போலீஸார் இருவர் தலா ரூ.1001 வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியங்குடி வீரிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக உள்ளார். இவர் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
புளியங்குடி- சங்கரன்கோவில் சாலையில் கடந்த அக். 25-ல் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த வேலுச்சாமியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது வேலுசாமிக்கும் போலீஸாருக்கு இடையே தகராறு நடைபெற்றது.
இதையடுத்து போலீஸாரை தாக்க முயன்றது, ஆள்மாறாட்டம் உட்பட 5 பிரிவுகளில் புளியங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.
இந்நிலையில் வேலுச்சாமி ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் தீபாவளிக்கு முதல் நாள் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர மனுவாக விசாரித்த உயர் நீதிமன்றம் வேலுச்சாமிக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுச்சாமியை தாக்கியதாக கூறப்படும் புளியங்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோர் ஆஜராகி, வழக்கறிஞரை தாக்கவில்லை என நீதிபதியிடம் தெரிவித்தனர்.
ஆனால் வேலுச்சாமியோ, இரவு முழுவதும் தன்னை காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, தனது குழந்தை முன்னிலையில் போலீஸார் தாக்கினர் என்றார்.
அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், வேலுச்சாமி மீதான வழக்கு கைவிடப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து காவலர்கள் இருவரும் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வழக்கறிஞரிடம் கடிதம் அளிக்க வேண்டும். காவலர்கள் இருவரும் தலா ரூ.1001 வீதம் வரைவு காசோலை எடுத்து வழக்கறிஞருக்கு வழங்க வேண்டும்.
இந்த வழக்கு முடிக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை போலீஸார் கீழமை நீதிமன்றத்தில் நவ. 4-ல் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையை ஏற்று நீதித்துறை நடுவர் நவ. 5-ல் வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இந்த வழக்கை காரணமாக வைத்து வழக்கறிஞர் மீது பார் கவுன்சிலும், காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையோ, வேறு எந்த நடவடிக்கையோ எடுக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
English News:
Madras High Court asks policemen who assaulted a Lawyer to apologize, pay Relief
MADURAI: The Madras high court has instructed two police men to write apology letters and pay relief of 1,001 each to a lawyer. This is for the assault they did for not wearing helmet. This happened while taking his kid to a nursing home in Tirunelveli district.