கொரோனா பரவல் காரணமாக வழக்குரைஞர்கள் கோட், கவுன் அணிய விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் தகடந்த மார்ச் 24-ம் தேதி முதல், தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களும் மூடப்பட்டன.
அவசர வழக்குகள் மட்டும் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வழக்குகள் தேக்கம், வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தற்போது தமிழகத்தின் 29 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கீழமை நீதிமன்றங்கள் செயல்பட, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான 7 மூத்த நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழுவால் அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை வழங்கி நிலையில், நீதிமன்றங்கள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் இரு நீதிபதிகள் கொண்ட 6 அமர்வுகளில் மட்டும் நேரடி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கவுன் அணிய விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மெட்ராஸ் பார் அசோசியேஷன் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அதைப் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த மே மாதம் 14-ம் தேதி இந்திய பார் கவுன்சில் பிறப்பித்த நிர்வாக உத்தரவில், காணொலி மூலம் ஆஜராகின்ற வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கருப்பு கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் பங்கேற்கும் வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் கழுத்துப்பட்டை மட்டும் அணிந்து ஆஜராக அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கோட், கவுன் அணிய விலக்கு அளித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
வெள்ளை நிற மேல்சட்டையுடன், உரிய நெக் பேண்ட் அணிந்து வழக்குகளில் ஆஜராக அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.