புதுக்கோட்டை: “”புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் துவங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு அரசு சார்பில், 25 லட்சம் ரூபாய் வரை மானியமும், வங்கிகள் மூலம் கடனுதவியும் பெற்றுத்தரப்படும்,” என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
புதுக்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் மனோகரன் பேசியதாவது:படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் கடந்த ஆண்டு(2012-13) முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்கள் துவங்க முன்வரும் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிப்பதோடு, தொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கான திட்ட மதிப்பீடு, அரசு மானியம் மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுக்கொடுக்கப்படும்.குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் துவங்க வழிவகை உள்ளது. திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்.தொழில் முனைவோர் பொதுப்பிரிவினர்களாக இருந்தால் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம், சிறப்பு பிரிவினர்களாக இருந்தால் 10 சதவீதம் பங்களிப்பு தொகையாக முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிகள் மூலம் கடனாக பெற்றுத்தரப்படும்.கடந்தாண்டு இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்க விருப்பம் தெரிவித்து 11 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவற்றில் பேப்பர் கப் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு தொழில் துவங்க விருப்பம் தெரிவித்த இரண்டு பெண்கள் உட்பட முன்று பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு 13 லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய் மானியமும், வங்கிகள் மூலம் கடனுதவியும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.இந்த ஆண்டு புதிய தொழில் முனைவோர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு கோடியே, 30 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏழு பயனாளிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு 40-50 லட்சம் ரூபாய் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராமையா, ஐ.ஓ.பி., மண்டல மேலாளர் மாதவன், சிறு தொழில் அதிபர்கள் சங்கத் தலைவர் பிரதிவிராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் தேவராஜ் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பலர் பங்கேற்றனர்.