பொருளாதார ரீதியாக சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளருவது இந்தியப் பொருளாதாரம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், மிளகனூரில் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக் கிளை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. வங்கித் தலைவர் எஸ்.எல். பன்சால் தலைமை வகித்தார்.
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வங்கிக் கிளை, ஏ.டி.எம். மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். தனது சொந்த தொகுதியான சிவகங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ப.சிதம்பரம் பேசியதாவது: அனைத்து நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை உள்ளது. எனவே பொருளாதார வளர்ச்சி என்பது சர்வதேச அளவில் மந்த நிலையில் உள்ளது. இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்காக முடியாது. அதே நேரத்தில் சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்து வேகமாக வளரும் இரண்டாவது பொருளாதார சக்தியாக இந்தியா உள்ளது.கச்சா எண்ணெய் விலை 108 அமெரிக்க டாலர்களாக இருப்பதுதான் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம். கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களுக்கு குறைவாக வரும்போது உள்நாட்டில் எரிபொருள் விலை குறைந்து விடும். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் நெல் குவிண்டால் ரூ.650-க்கு விற்கப்பட்டது. இப்போது குவிண்டால் ரூ.1,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவுப் பொருள்களுக்கும் கூடுதல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.2004- ஆண்டு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி 2.60 லட்சம் டன்னாக உள்ளது. கோதுமை, சர்க்கரை ஆகியவை இறக்குமதி செய்த காலம்போய், இப்போது இவற்றை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நிலைமை உள்ளது. இதற்குக் காரணமான விவசாயிகளுக்கு வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நகர்ப்புறங்களைவிட கிராமங்களில் அதிகமாக வங்கிக் கிளைகள் திறக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 8 ஆயிரம் வங்கிக் கிளைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.மாணவர்களுக்கு வங்கி மூலம் கல்விக் கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், தொழில் கடன் உள்ளிட்டவற்றை சிதம்பரம் வழங்கினார். மிளகனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைக்க வங்கி மூலம் ரூ.5 லட்சம், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வண்டி ஆகியவற்றையும் அவர் வழங்கினார். விழாவில், வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் வி. கண்ணன், பூபிந்தர் நாயர், பாண்டியன் கிராம வங்கி இயக்குநர் எஸ். செல்வராஜ், மிளகனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.