விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை ஆதரித்து அவரது ஆதரவாளர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
ஜூலியன் அசாஞ்சேவால் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய ராணுவ அறிக்கைகள், இதர நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய கடிதங்களை அளித்தவர் பிராட்லி மேன்னிங்(25).
இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 90 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பரிந்துரை செய்த கையெழுத்து பிரதிகள் நார்வேயிலுள்ள நோபல் பரிசு அறக்கட்டளை அலுவலகத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.
அமைதியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் வகையில் பணியாற்றிய பிராட்லி மேன்னிங்கிற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் 2009ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு இந்த பரிசை வழங்கிய களங்கத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என பிராட்லி மேன்னிங்கின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.