Lessons Learned and Reconciliation Commission
நவநீதம்பிள்ளையின் பயணம் நீதியை வழங்குமா என உலகத் தமிழர்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து, அனைத்து உலக மன்றத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், இலங்கையில் நேரடி ஆய்வு விசாரணை நடத்துவதற்காகச் சென்றிருக்கின்ற, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளையின் முயற்சியை வரவேற்கிறோம்.
சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றங்கள் குறித்து, துணிச்சலாகவும், நேர்மையாகவும், கருத்துகளைக் கூறுகின்ற திருமதி நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு, தமிழ்க்குலம் நன்றி கூறுகிறது. அவரது ஆய்வுப் பயணத்துக்கு, சிங்கள இனவெறியர்களும், புத்த சாமியார்களும், ராஜபக்ச அரசின் தூண்டுதலால் எதிர்ப்பும் கண்டனமும் காட்டி வருகிறார்கள். கடந்த கால நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டால், அவரது இப்போதைய பயணத்தாலும், தமிழர்களுக்கு, நீதி மறுக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் எழுகிறது. 2008 ல், இலங்கைப் பிரச்சினையைக் கண்காணிக்கின்ற ஐ.நா. குழுவில், மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை, ஐ.நா. பொதுச்செயலாளரின் ஆலோசகர் விஜய் நம்பியார் உள்ளிட்டவர்களால் நிராகரிக்கப்பட்டது.
2009 மார்ச் மாதம் நிகழ்ந்த உச்சகட்டப் போரின்போது, ஐ.நா. அலுவலகத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களில், படுகொலையான தமிழர்களின் எண்ணிக்கை, அதிர்ச்சி தரும் அளவுக்கு அதிகமாக இருந்ததால், ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில், மார்ச் இரண்டாம் வாரத்தில், அவசரக் கூட்டமும், செய்தியாளர்கள் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில், இரண்டு நிகழ்வுகளையும் விஜய் நம்பியார் ரத்து செய்து விட்டார். சிங்கள அரசின் இனக்கொலையை மூடி மறைக்க, புலிகள் மீதும் குற்றச்சாட்டு வைக்க, அழுத்தம் தரப்பட்டது என்பதை, ஐ.நா.வின் உள்ள அறிக்கையும், சார்லி பெற்றியின் விசாரணை முடிவுகளும் அம்பலப்படுத்தின.
இலங்கை அரசின் மீது, அனைத்து உலக நாடுகளின் விசாரணை வேண்டும் என்று, ஐ.நா.வின் பிற அமைப்புகள் வைத்த கோரிக்கையை, ஐ.நா. தலைமை நிராகரித்ததையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. ஐ.நா. விதிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ‘இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்’ என்று, ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் கூறியது, தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை மறுத்ததாகும். தமிழ் இனக்கொலை குறித்து, ஐ.நா.வில் நீதி இல்லை என்ற கண்டனம், பல நாடுகளில் எழுந்ததால், வேறு வழியின்றி, பான்-கீ- மூன், மார்சுகி தாருமன் தலைமையில், மூவர் குழுவை அமைத்தார். அந்தக் குழு, தமிழ் இனப் பேரழிவு குறித்த உண்மைகளை, உலகுக்குச் சொன்னது . இதற்கிடையில், உலகின் கண்களில் மண்ணைத் தூவவும், தான் செய்த இனக்கொலையை மூடி மறைக்கவும், ‘கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (Lessons Learned and Reconciliation Commission)’ என்ற அப்பட்டமான ஒரு மோசடி நாடகக் குழுவை இலங்கை அரசே அமைத்துக் கொண்டது.
இந்தக் குழு, உண்மைகளைக் கண்டு அறியவில்லை; அரசின் கொடுமைகளைப் பதிவு செய்யவில்லை, மாறாக, நீதியையும் உண்மையும் புதைக்கின்ற வேலையைத்தான் செய்துள்ளது என்பதை, பல நீதிமான்களும், சட்ட வல்லுநர்களும், சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஏமாற்றுக் குழுவின் பரிந்துரைகளைத்தான் செயல்படுத்த வேண்டும் என, ஜெனீவா மனித உரிமைக் குழுவில் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது கண்துடைப்பே ஆகும். இந்தப் பின்னணியில், நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறதா? என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன், நவநீதம்பிள்ளையின் பயணம் அமையும் என்றால், அது தமிழர்களுக்கு எவ்விதத்திலும் நீதியை வழங்காது தமிழர்களால் முற்றிலும் நிராகரிக்கப்படும் என்பதை, கனத்த இதயத்தோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஜெனீவா மனித உரிமைக் குழுவின் தீர்மானம், தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை. கொடுமை செய்த இலங்கை அரசுக்கு, எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தமிழர்களின் வாழ்வுரிமை, பாதுகாப்பு, நிலங்கள் என எதுவும், ஐ.நா. மன்றத்தால், மனித உரிமைக் குழுவால் பாதுகாக்கப்படவில்லை. 2009 மே மாதத்துக்குப் பின்னரும், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கும், கொடுந் துன்பத்துக்கும், சித்திரவதைக்கும் ஆளாகி வருகிறார்கள் என்பதுதான், உண்மையிலும் உண்மையாகும். செய்தியாளர்கள் தாக்கப்படுகிறார்கள்; தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள், தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன, வழிபாட்டுத் தலங்களைத் தகர்க்கின்றார்கள், தமிழர் தாயகம் சிங்களமயமாக்கப்படுகிறது, இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுவதும், ஏராளமானோர் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
2007 ல் இலங்கைக்குச் சென்ற, சர்வதேச நீதிபதிகள் குழுவின் தலைவர், இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பகவதி, ‘இலங்கையின் நீதி பரிபாலனம் என்பது, நேர்மையற்றது, அனைத்துலக நாடுகள் ஏற்றுக் கொண்ட நீதியின் அடிப்படைகளைக் கூடக் கடைப்பிடிக்க முடியாதது, இலங்கையில் சாட்சிகளுக்கான பாதுகாப்பே கிடையாது’ என்று பதிவு செய்ததை, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இதே பின்னணியில், இலங்கை அரசு அண்மையில் அமைத்து இருக்கின்ற, காணாமல் போனவர்களைப் பற்றிய போலி விசாரணைக் கமிசனையும் நிராகரிக்க வேண்டும். இந்நிலையில், நவநீதம்பிள்ளை தமிழ் ஈழப் பயணம், முக்கியமானதும், அவசியமானதும் ஆகும். பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகளை, அரசின் குறுக்கீடு இன்றிச் சந்தித்து, தமிழர்களின் பிரச்சினைகளையும், அச்சத்தையும், கோரிக்கைகளையும் அவர் பதிவு செய்ய வேண்டும். ஆனால், கொலைவெறி சிங்கள அரசின், எதேச்சாதிகார அடக்குமுறைப் போக்கு, ஒரு நேர்மையான விசாரணைக்கோ, கருத்துப் பதிவுக்கோ, வாய்ப்பு அளிக்குமா? என்பது, மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. எனவே, ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர், தமிழர்களின் பிரதிநிதிகள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், நிலங்களை இழந்தவர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரையும், யுத்தத்தில் தமிழ்ப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்துப் பதிவு செய்ய விரும்பும் மகளிர் பிரதிநிதிகளையும் நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்று, துயரத்தில் தவிக்கும் தமிழர்கள் சார்பில் வேண்டுகிறேன்.
இது ஒன்றுதான், குறைந்த பட்ச நேர்மையான விசாரணைக்கான நடவடிக்கை ஆகும் என்பதை, நவநீதம்பிள்ளை நன்கு அறிவார். ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம், கடந்த ஆண்டிலும், இந்த ஆண்டின் தொடக்கத்திலும் வலியுறுத்தியது போல, தமிழ் இனப்படுகொலை குறித்து, இலங்கை அரசின் மீது, சுதந்திரமான அனைத்து உலக விசாரணையை நடத்த வேண்டும். 2008, 2009 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த இனப்படுகொலைத் தாக்குதல்களும், தற்போது நிகழ்ந்து கொண்டு இருக்கின்ற கட்டுமான இனப்படுகொலையும், அனைத்து உலக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நீதிக்கான பாதையை, நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, ஈழத்தமிழர்களும், உலகெங்கும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், தமிழர் தாயகத்தை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்து இருப்பது, தமிழர் பகுதிகளைச் சிங்கள மயமாக்குதல், சிங்களச் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள், கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், தமிழர் தாயகத்தில் நிலை கொண்டு உள்ள சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதையும், உலகுக்குத் தெரியப்படுத்திட, மனித உரிமைகள் ஆணையர், முன்வர வேண்டுகிறேன். மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தடுக்கும் இராணுவ அடக்குமுறைகள், இறந்தவர்களின் கல்லறைகளையும், புதைக்கப்பட்ட இடங்களையும் அழித்து, அங்கே சிங்கள இராணுவத்துக்கான கட்டடங்களைக் கட்டுதல், வெற்றித்தூண்களை நிறுவுதல், யுத்த அருங்காட்சியகம் அமைத்தல், தமிழர் மடிந்த பகுதிகளில் கேளிக்கை விடுதிகள் கட்டுதல், இவை அனைத்தையும் குறித்து, விசாரணை நடத்த, மனித உரிமை ஆணையர், உலகுக்கு அறிக்கை தர வேண்டுகிறேன்.
உண்மை வெளிச்சத்துக்கு வருவதைத் தடுக்க முற்படும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். இருண்டு போன தமிழர் வானத்தில், நம்பிக்கை ஒளிக்கீற்றாக, நவநீதம்பிள்ளை அவர்களின் கடந்த அறிக்கை அமைந்தது. தற்போது, தமிழர் பகுதிகளுக்குச் சென்று, ஈழத் தமிழ் மக்களைத் தடையின்றிச் சந்தித்து, சிங்களவர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களையும் நேரடியாகச் சந்தித்து, உண்மையை அவர் உலகத்துக்குச் சொல்லவும், அனைத்தையும் ஆவணப்படுத்திடவும் வேண்டுகிறேன்.
தமிழ் மக்களின் மொத்த கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ள ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களுக்கு, 2009 பெப்ரவரி 12ம் நாள், ஜெனீவா ஐ.நா. அலுவலகம் முன்பு, தீக்குளித்து மடிந்த மாவீரன் முருகதாசன் எழுதிய கடிதத்தின் வரிகளை நினைவுக்குக் கொண்டு வருகிறேன். சிங்கள அரசு, எமது தமிழ் மக்களுக்குச் செய்து வந்த கொடுமைகள், நீண்ட துன்பியல் வரலாற்றைக் கொண்டது. அதன் நிகழ்காலப் பரிமாணமாகவே, தமிழ் மக்களின் பிரச்சினையில், உலக நாடுகளின் தலையீடும் ஏற்பட்டது. இதன் விளைவாக, நீதி கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்பினார்கள். நானும் அதை நம்பினேன். ஆனால், நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கிறோம். எமது மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்கும், சிங்கள அரசுடன் சேர்ந்து, இணைத் தலைமை நாடுகள், இன அழிப்புக்குத் துணை போனதற்கும் சாட்சியாக, ஐ.நா. மன்றத்தின் முன், இந்தத் தமிழன் முருகதாசன் தீக்குளித்தான் என்ற வரலாறும் சேரட்டும். ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீதி கிடைக்கச் செய்வதில், ஐ.நா. வின் பங்கு எவ்வாறானது என ஆய்வு செய்யப்படும் போது, ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் சார்பாக, இலங்கைத் தமிழ் இளைஞன் முருகதாசன் தீக்குளித்து உயிர் கொடுத்தான் என்ற வரலாறும் சேரட்டும்’ என்று தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தியாகத்தை மனதில் கொண்டு, தங்கள் தாயக விடுதலைக்காக, இனக்கொலைக் களத்தில் பலியான, 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்களையும் நெஞ்சில் நிறுத்தி, தமிழ் ஈழத்தின் விடுதலைக்கான, பொது வாக்கெடுப்பினை நடத்துவதற்கும், இலங்கை அரசு மீது, இனப்படுகொலைக்கான விசாரணையை, ஐ.நா.மன்றமும், அனைத்து உலக நாடுகளும் மேற்கொள்வதற்கும், நீதியின் வெளிச்சம் தமிழர்களுக்கு நிரந்தரமாகக் கிடைப்பதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், இப்போதைய பயணத்தின் மூலம், மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்கள் நிறைவேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.