A Jewellery owner was arrested for cheating Rs 100 cr in Coimbatore
கோவையில் ரூ.100 கோடி ரூபாய் நகைகளை மோசடி செய்து விட்டு, தலைமறைவாக இருந்த நகைக்கடை அதிபரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, புரூக்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சகோதரர்கள் பாலாஜி, 45, மற்றும் அசோக்குமார், 42. இருவரும் கூட்டாக, கோவை வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடுகளில் ஜிஷா, ஸ்வர்ண லட்சுமி என்ற பெயர்களில் நகைக்கடைகளை நடத்தினர். பொதுமக்கள், நகை வியாபாரிகள், வங்கிகள் என, பலரிடமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு கடந்த மே மாதம் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் சகோதரர்களில் ஒருவரான பாலாஜி, சென்னை கோர்ட்டில் சரணடைந்தார். திங்களன்று இரவு அமராவதி நகர் செக்போஸ்ட்டில், அசோக்குமாரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அசோக்குமாரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன. “கந்து வட்டிக்காரர்களிடம் மீட்டர் வட்டிக்கு பல கோடி கடன் பெற்றோம். பல இடங்களில் அசையா சொத்துக்களை வாங்கினோம். நகை வியாபாரம் சரியாக இல்லாத காரணத்தால், கந்து வட்டிக்காரர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியவில்லை. வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள், எங்களை மிரட்டத்துவங்கினர். அவர்களிடம் இருந்து தப்பிக்கவே தலைமறைவானோம்’ என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நேற்று மாலை கோவை ஜே.எம்., கோர்ட் 2ல் மாஜிஸ்திரேட் விஜய் கார்த்திக் முன் அசோக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அசோக்குமாரை வரும் 25ம் தேதி வரை கோர்ட் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.