ஜிம்பாவ்வேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் கெய் வெட்டல் (40). இவர் ஜிம்பாவ்வே நாட்டின் மாஜி கிரிக்கெட் வீரர் ஆவார்.
இவர் துர்க்வே ஆற்றில் இருந்து 2 கிமீ தொலைவில் தனது அலுவலகத்தோடு, குடியிருப்பையும் அமைத்து வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணிகளை முடித்து விட்டு தனது படுக்கையறையில் படுத்து ஹை வெட்டல் உறங்கத் தொடங்கினார். அப்போது அவரது அறைக்குள் சுமார் 8 அடி நீள முதலை ஒன்று ஜன்னல் வழியாக உள்ளே புகுந்தது. இது எதுவும் கெய் வெட்டலுக்கு தெரியாமல் நன்றாக குறட்டை விட்டு உறங்கினார். அறைக்குள் புகுந்த முதலை நைசாக இவரது கட்டிலுக்கு அடியில் புகுந்தது. அங்கு டைல்ஸ் தரையில் ஹாயாக உறங்கியது. காலையில் கண் விழித்த கெய் வெட்டல் வழக்கம் போல சமையலறையில் டீ போடும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வீட்டை சுத்தம் செய்யும் பெண் வந்தார். கெய் வெட்டலின் அறைக்குள் நுழைந்து கட்டிலுக்கு அடியே பெருக்குவதற்காக குனிந்த அந்த பெண் அங்கு 8 அடி நீள முதலையைக் கண்டு மயக்கம் போடாத குறையாக அலறி கூச்சல் போட்டார். உடனே சத்தம் கேட்டு கெய் வெட்டலும், அக்கம் பக்கத்தினரும் அங்கு விரைந்தனர். அங்கு முதலையைக் கண்டு பதறினர். உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதலையை பிடித்தனர். இந்த முதலை அருகில் இருக்கும் துர்க்வே ஆற்றில் இருந்து தப்பி வந்திருக்கலாம் என தெரிவித்தனர். நைல் நதியில் வாழும் வகையைச் சேர்ந்த இந்த முதலையின் எடை சுமார் 150 கிலோ எடை கொண்டது. மனிதர்களை கூட வேட்டையாடக் கூடியது என்று முதலை நிபுணர்கள் தெரிவித்தனர்.