Narendra modi speech in trichy
திருச்சி: மத்தியில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு தொடர்ந்தால், நம் இளைஞர்கள் பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும் என திருச்சியில் 26.9.2013 வியாழன் நடந்த பா.ஜ.க. இளந்தாமரை மாநாட்டில் நரேந்திர மோடி பேசினார்.
திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பா.ஜ.க.வின் இளந்தாமரை மாநாடு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாடு காரணமாக திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாநாடு மேடை டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேளராவில் இருந்து தனி விமானம் மூலம் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி திருச்சி வந்தனர். அவர்களை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். இந்த மாநாட்டில் நரேந்திர மோடி மாலை 6.15 மணியளவில் தனது உரையை தொடங்கி, இரவு 7.25க்கு முடித்தார்.
நரேந்திர மோடி மைக்கைப் பிடித்ததும், ”காஷ்மீரிலும், நைரோபியிலும் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவத்தினருக்கும், தியாகிகளுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்துவோம்” எனக் கூறி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து ‘அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் தனது உரையை ஆரம்பித்த மோடி, சில வரிகளை தமிழிலேயே பேசினார். தொடர்ந்து ஹிந்தியில் பேசத் தொடங்கினார்.
”தமிழ்நாட்டுக்கு வருவதை நான் பெருமையாக கருதுகிறேன். ‘தமிழனுக்கு என்று ஒரு குணம் உண்டு’ என்று பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம். அந்த தமிழகத்தில் உரையாற்றுவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். தமிழக மக்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடம் கோயில் போன்றதாகும். தமிழ் மொழி பழமையான மொழி மட்டுமின்றி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி. தமிழகத்தில் உற்பத்தியாகின்ற பொருட்கள் சர்வதேச சந்தையில் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் தான் இ-மெயிலை கண்டு பிடித்தனர். உலகில் உள்ள மென்பொருள் நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பில் தமிழர்கள் தான் இருக்கின்றனர். சங்க இலக்கியத்தை கற்றுக்கொள்ள நான் மிகவும் விரும்பினேன்.
தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களிடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளது. சென்னையில் உள்ள சௌகார்பேட்டையில் குஜராத்தியர்கள் அதிகளவில் உள்ளனர். அதேபோல், குஜராத் மணிநகரில் பெரும்பாலான தமிழர்கள் இருக்கின்றனர். மணிநகர் தொகுதியில் தன்னை வெற்றி பெற செய்த பெருமை தமிழருக்கு உண்டு. தமிழ்நாடும் குஜராத்தும் கடலோரத்தில் உள்ள மாநிலங்கள். முதலில் வெளிநாடுகளுக்கு கடல் வழியாக வாணிபம் செய்தது குஜராத்தும், தமிழகமும் தான்.
நாட்டில் இருக்கிற ஒவ்வொரு குமகனுக்கும் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. அண்டை நாடு தாக்குதல் நடத்தும் நிலையில் நம்நாடு உள்ளது. நம்நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் எல்லைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்தியாவில் எந்த நிலங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எதற்கும், யாருக்கும் பாதுகாப்பு தராத அரசை நாம் தூக்கி எறிய வேண்டும்
நம் நாட்டு மீனவர்களை அண்டைநாட்டுப் படையினர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் தீவிரவாதிகளால் நம் படையினர் கொல்லப்படுகிறார்கள். நம் நாட்டு மக்களுக்கு இவ்வாறாக இன்னல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்போது, நம் பிரதமர் வெளிநாட்டிற்கு சென்று அண்டை நாட்டு பிரதமருடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது நியாயம் தானா? இந்த நாட்டின் கவுரவத்துக்கு முதலிடம் கொடுக்கப்போகிறீர்களா? உலக நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு முக்கியதத்துவம் தரப்போகிறீர்களா? என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
பொரளாதார ரீதியில் நாடு செயல்பட முடியாத நிலையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் கொள்கையால் இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவு சரிந்து விட்டது. மத்தியில் இதே ஆட்சி தொடர்ந்தால் ரூபாயின் மதிப்பை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உருவாகும். ஐக்கிய முன்னணி ஆட்சி நீடித்தால் நம் இளைஞர்கள் பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும். மத்திய அரசின் கொள்கையால் ஏராளமான தொழிற்சாலைச்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. 20 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. நிலக்கரி இல்லாமல் ஒரு புறம் ஆலைமுடக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் நிலக்கரி தோண்டப்படாமல் உள்ளது.
குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள். தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். இரு மாநில மீனவர்களையும், இரு நாடும் தூக்கிச் செல்வதற்கு காரணம் மத்திய அரசுதான். மத்தியில் உள்ள பலவீனமான அரசால்தான் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் உடனே விடுவிக்கப்பட்டனர். மீனவர்கள் பிரச்னையில் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
நம் மக்கள் ஒருமைப்பாட்டுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனல், மத்திய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீட்டி வருகிறது. அவர்களிடம் மக்களைப் பிளவுப்படுத்தும் எண்ணம் உள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான தனிச் சட்டம் கொண்டு வந்து மக்கள் விரோத செயலில் ஈடுபடுகிறது. அதேபோல், நதிநீர் பிரச்னையை வைத்து, ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இடையில் மோதலை உருவாக்குகிறது. மேலும், சாதி, மத, மொழியால் நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்