superbug antibiotics and multinational pharmaceutical companies : Money minted by drug manufacturers particularly, Killer super bug antibiotics and multinational pharmaceutical companies all over the world
நோயற்ற வாழ்வு ஒரு மிகபெரிய வரம், நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஏண்டிபயாட்டிக்) கட்டுப்படுத்த முடியாத எவரும் அறியபடாத தொற்றுநோய் பரவலால் உண்டாகும் சாவு எண்ணிக்கை பூமியில் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே போகிறது. அமெரிக்கா கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 நோயாளிகள் இறப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இதற்கு புதிய நோய் எதிர்ப்பு ஆய்வுகளோ, இன்றைய நிலைக்கு தேவையான மருந்து கண்டுபிடிப்புகளோ, புதிய மருத்துவ ஆராய்ச்சிக்கான முதலீடுகளோ பெரும்பாலும் இல்லாதது தான் காரணம்.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக நலவாழ்வு அமைப்பு இதற்கு முன்பே இதுபற்றி விடுத்துள்ள அபாய எச்சரிக்கையில்,சூப்பர் பக் பாக்டீரியா நோய்க்கிருமிகள், கூட்டு நோய் எதிர்ப்பு மருந்துகளை வென்று ஆதிக்கம் ஓங்கிஇருப்பதால், ‘சூப்பர் பக் பாக்டீரியா’ வை கொன்று அழிக்கக்கூடிய புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தலையாய பொறுப்பு வடக்கு நாடுகளுக்கே இருக்கிறது என கூறியுள்ளது.
‘ஆண்டிபயாட்டிக்’ வகை மருந்துகளுடைய முக்கியமான பயன் என்னவென்றால் நோய்க்கிருமிகளை கொன்று அழிப்பது தான். அந்த கிருமிகள் முற்றிலுமாக அழிக்க முடியாமல் இருந்தாலும் மனிதனின் உடலில் உள்ள நன்மை செய்ய கூடிய ‘பாக்டீரியாக்கள்’ மூலமாக ஓரளவு நிவாரணம் கிடைக்கிறது. அழிக்கப்படாமல் மீதமுள்ள “சூப்பர் பக்’ என அழைக்கப்படும் “பாக்டீரியா கிருமிகள்” திரும்பவும் பல மடங்கு வீரியத்துடன் வளர்ந்து எந்த ஒரு சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் அடங்காமல் மனிதனின் சாவை உறுதியாக்கும்.
ஐ.டி.எஸ்.ஏ. என அழைக்கப்படும் அமெரிக்க தொற்று நோய் எதிர்ப்பு சங்கம் வெளியீடு செய்துள்ள 2013-ம் ஆண்டு அறிக்கையின்படி, 2009-ம் ஆண்டுக்குப்பின்னர் 2 நோய் எதிர்ப்பு மருந்துகளை மட்டுமே வெளியிட அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் , இன்னும் 7 நோய் எதிர்ப்பு மருந்துகளின் உபயோகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த ஏனைய மருந்துகள் ஒப்புதல் பெறப்பட்டு மக்கள் உபயோகத்திற்கு வருவதற்கு பல வருடங்கள் ஆகா வாய்ப்புண்டு. உலகின் மிகப்பெரிய 12 பன்னாட்டு மருத்துவ பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், சில காலங்களுக்கு முன் ‘நோய் எதிர்ப்பு மருந்து’ ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் முழு வீச்சில் இயங்கிகொண்டிருந்தன. அனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. லாபம் ஈட்டும் தொழிலாக ‘நோய் எதிர்ப்பு மருந்து’ உற்பத்தி இல்லை என்பது தான் இதற்கு முக்கிய காரணம். இப்பொழுது 4 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் தான் ‘நோய் எதிர்ப்பு மருந்து’ களின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் குறிப்பிடும் படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.
அந்த நிறுவனங்கள் பின்வருமாறு:
- கிளஸ்கோ ஸ்மித் கிளென்
- பிஃப்சர்
- ஆஸ்ட்ரா செனகா
- மெர்க்
மாபெரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் என்ன காரணத்தினால் நோய் எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என்ற கேள்விக்கு ஹெலன் பவுச்சர் – ஐ.டி.எஸ்.ஏ செய்தியாளர் பதில் கூறும் போது, “நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகள் பொது மருத்துவப் பயன் என்பதால் அவைக்கு விலை கூடுதலாக நிர்ணயம் செய்ய முடியாது. ஆனால் அதே அதுவே உயிர் காக்கும் மருந்து உற்பத்தியில் கவனம் செலுத்தினால் கூடுதல் லாபம் கிடக்கும் என்கிறார். உயிர் காக்கும் மருந்து எனப்படுவது புற்றுநோய் மற்றும் இதயநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளேயாகும். உதாரணத்திற்கு கடந்த 12 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் மருந்துகள்ஆராய்ச்சியில் 1.4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் செலவிடப்பட்டு சுமார் 10,000 அணு உயிர்கள் (மாலிக்யூல்ஸ்) கண்டுபிடிக்கப்பட்டன. 2010-ல் பயன்பாட்டுக்கு ஒப்புதல் கிடைக்க பெற்ற மருந்துகளில் சுமார் 3000 மருந்துகள் வெளிவர இருக்கின்றன. அவற்றுள் 800 புற்றுநோய் மருந்துகள் மற்றும் 250 இதயநோய் மருந்துகள். இந்த மருந்துகள் தவிர்த்து 83 புதிய மருந்துகள் மட்டும் தான் நோய் எதிர்ப்பு சக்திகொடுக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகளாகும். இதுதான் இந்த உலகத்தின் நிலைமை.
இந்திய மருந்து உற்பத்தித் துறையின் பங்களிப்பு உயர்வானது. உலகத்தில் தொழில் ரீதியாக 3-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனத்தொழிலின் மதிப்பு சுமார் 21 பில்லியன் டாலர். மதிப்பின் அடிப்படையில் 14-வது இடம். வளர்ச்சி 13 %. பன்னாட்டு நிறுவனங்களின் பிடிப்பில் இந்திய மருத்துவத் தொழில் வளர்ச்சி பெறுகிறது. கடந்த ஏப்ரலில் நோவார்ட்டிஸ் என்ற அமெரிக்க நிறுவன வழக்கில், தில்லி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மருந்து உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்கள் மக்களிடம் அடிக்கும் கொள்ளைக்கு ஒரு சிறந்த உதாரணம்.
ரத்தப் புற்றுநோய்க்குரிய மருந்து கிளீவி என்ற பெயரிலும் கிளைவி என்ற பெயரிலும் விற்கப்படும். அடிப்படை மருந்தான இமாடினிப் மெசிலேட் மருந்துக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்று இந்திய விற்பனைக்கு ஒப்புதல் பெற்ற ஆண்டு 2002. அன்று முதல் மேற்படி மருந்துகள் ஒரு நபருக்கு ஒரு மாதம் 2500 டாலர் (ரூ.15,000) என்ற அளவில் விற்கப்பட்டன. எனினும் அதே ஆண்டு அதே மருந்தை மாற்றுப் பாதுகாப்பு செய்முறை அடிப்படையில் ஏற்கெனவே காப்புரிமை செய்யப்பட்ட இமாடினி மெசிலேட்டை நாட்கோ என்ற இந்திய நிறுவனம் 10 மடங்கு குறைந்த விலைக்கு (250 டாலர்) விற்பனை செய்தது. நாட்கோவைப் பின்பற்றி, வேறு பல ஜெனரிக் மருந்து நிறுவனங்கள் (காப்புரிமை செய்யப்பட்ட மருந்தை மாற்றுச் செய்முறையில் தயாரித்து விற்கும் நிறுவனங்கள்) குறைந்த விலைக்கு விற்றன. நோவார்ட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது இந்திய ஜெனரிக் நிறுவனங்கள் சார்பில் புற்றுநோயாளிகள் நுகர்வோர் சங்கமும் வழக்கு போட்டது.
நன்கறியப்பட்ட மருத்துவப் பொருளை ஊர்மாற்றிப் பேர்மாற்றி உருமாற்றிக் கருமாற்றிப் புதிதாகப் பெயர் சூட்டி காப்புரிமை பெறுவதை டிரிப்ஸ் (அறிவார்ந்த சொத்துரிமைச் சட்டம்) ஷரத்துக்கள் ஏற்காது என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நோவார்ட்டிஸ் கேஸ் தோற்றுப் போனது. எனினும் ரத்தப் புற்றநோய்க்குரிய மருந்தின் ஒரு மாதச் செலவு 150 டாலருக்குள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி நாட்கோ மேலும் விலையைக் குறைத்தது. நோவார்டிஸ் நிறுவனமும் மருந்து விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 110ஆவது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில், மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலைப்பாடு முற்றிலும் சரியே. அண்மையில் வெளிவந்த இந்த அறிக்கை, இப்போது இந்தியாவில் இயங்கி வரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களில் மேலும் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதை தடை செய்ய வேண்டுமென்று மிகவும் வெளிப்படையாகவே எடுத்துரைத்துள்ளது. இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் பெரும்பாலும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகும். இத்தகைய நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் டாலர் பலத்தால் கபளீகரம் செய்யத் துடிப்பதெல்லாம் சுயலாபத்திற்கும், வருமானத்திற்கும்தானே தவிர மக்களின் நலனுக்காக அல்ல.
1970களில் இந்தியாவில் 85 சதவீத மருந்துகளை பன்னாட்டு நிறுவனங்களே உற்பத்தி செய்தன. 15 சதவீதம் மட்டுமே தேசிய நிறுவன உற்பத்தி. 1990களில் நிலைமை மாறியது. இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1970 உதவியால் இந்திய தேசிய மருத்துவ நிறுவனங்களின் உற்பத்தியும் விற்பனையும் ஏற்றுமதியும் உயர்ந்து மருந்து உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியாவை உயர்த்தியுள்ளது. இந்திய நிறுவனங்கள் மக்கள் நலனை மனதில் வைத்து, நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி மிகவும் கட்டுப்பாடான விலையில் வழங்குகிறது.
இந்திய தேசிய நலனுக்கு எதிராக கி.பி. 2000 முதல் கடந்த ஆண்டு வரை சுமார் 4392 மில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் இந்திய மருத்துவ நிறுவனப் பங்குகளாக வந்துள்ளன. 2010-13 ஆண்டுகளில் 18678.11 கோடி அந்நிய முதலீட்டில் 3 சதவீதம் மட்டுமே மருந்து ஆராய்ச்சி – வளர்ச்சிக்குச் செலவாகியுள்ளது. ஆகவே, அந்நிய நாட்டு மருத்துவ நிறுவனங்களின் இலக்கு தேசிய நிறுவன வளர்ச்சியை சீர்குலைப்பதுதான் என்று தெளிவாகிறது. எனினும், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் பயனால் இந்திய மருத்துவ நிறுவனங்கள் கண்டுபிடித்த அணு உயிரிகள் (மாலிக்யூல்ஸ்) சுமார் 80 பில்லியன் டாலர் மதிப்புள்ளவை காப்புரிமையாக்கப்பட்டதால், பன்னாட்டு நிறுவனங்களுடன் சமபலத்துடன் போட்டியில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் நலவாழ்வுத் துறை மருத்துவக் கழகங்களின் யோசனைகளையும், 110ஆவது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையையும் புறந்தள்ளிவிட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மைலான் – அஜிலா ஸ்பெஷாலிட்டி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கி பன்னாட்டு மருந்து நிறுவன ஏகபோகங்களின் கைப்பாவையாக மாறி இந்திய தேசிய மருத்துவ நிறுவன வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
இன்றைய தலையாய தேவை தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் வழங்கல்தான். தொற்றுநோய் எதிர்ப்பில் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை புறக்கணிக்கப்பட்டால் மரணத்தைப் பரப்பும் “சூப்பர் பக்’ கிருமிகளால் பொது மருத்துவமனைகளில் தொற்றுநோய்ச் சாவுகள் மேலும் மேலும் உயரலாம். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இந்திய மருத்துவ விஞ்ஞானிகளிடம் உண்டு. பொதுத் துறையில் ஹிந்துஸ்தான் ஆண்டி பயாட்டிக்ஸ் நிறுவனம் “சூப்பர் பக்’ பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆய்வில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து இந்தியத் தேவையை மட்டுமல்ல. உலகத் தேவையையே நிறைவேற்றும் காலம் விரைவில் வரவேண்டும்.