Tamil actress Anjali : The Madras High Court ordered that it is not necessary for tamil actress Anjali to appear for the hearing of director Kalanjiam defamation case in the court
சென்னை: இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து நடிகை அஞ்சலிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் அஞ்சலி. தன் சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் சென்றுவிட்டார். இன்று வரை சென்னை திரும்பவே இல்லை.
தான் வெளியேறியது ஏன் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த நடிகை அஞ்சலி, தன் சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறி பரபரக்க வைத்தார்.
இதையடுத்து, அஞ்சலி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் கோர்ட்டில் இயக்குனர் களஞ்சியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நடிகை அஞ்சலி நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, களஞ்சியம் தொடர்ந்த வழக்கையும், அந்த வழக்கில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்டையும் ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை அஞ்சலி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 22-ந்தேதி (இன்று வெள்ளிக்கிழமை) வழக்கு விசாரணைக்கு வரும்போது, அன்று மட்டும் அஞ்சலி நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு, எதிர் மனுதாரர் களஞ்சியம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை நீதிபதி அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.