Violence Against Women : November 25th International Day for the Elimination of Violence Against Women
நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. இத்தனைக்கும் 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பித்தன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலை நேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்காலத்திலும் பெண்கள் இப்படியான தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
அத்துடன் இன்றைய காலக்கட்டத்தில் வரதட்சிணை, பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, சிசுக்கொலை என பெண்கள் மீதான வன்முறை பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகிறது. அதிலும் மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை விட பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் வளர்ச்சி வீதம் அதிகம் என்பதும் கல்வியறிவு பெற்றவர்களும் குற்றத்தில் ஈடுபடுவதுதான் வேதனைக்குரியதுதான் .
Violence Against Women : November 25th International Day for the Elimination of Violence Against Women
நமது இதிகாசங்களை உற்று நோக்கும் போது ஆரம்ப கால பெண்கள் மிகக் கெளரவத்துடனும் சுதந்திரமாகவும் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் கூறப்படுகின்றன. இடைக்காலப் பகுதியில் அந்நிய நாட்டினரின் ஆக்கிரமிப்புகள், பொருளாதார நெருக்கடி போன்ற சமூகக் காரணங்களால் பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டாள். தற்போதைய நிலையிலும் இது தொடர்கின்றது என்பதை பலதரப்பட்ட மட்டங்களிலிருந்து அறியக்கூடியதாய் உள்ளது. இன்று ஊடகங்களில் நாளொன்றுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான ஒரு வன்முறையாவது அறிய முடிகின்றது. பெண்ணாக பிறப்பதாலேயே பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் ஐ.நா., சபை, 1993ம் ஆண்டு பெண்கள் மீதான வன்முறை மனித உரிமையை மீறும் செயல் என அறிவித்தது. இதை தொடர்ந்து 1999 முதல், நவ., 25ம் தேதி உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.