Tractor driver killed in police inquiry at Thiruthuraipoondi in a Police station at Thiruvarur district of Tamil Nadu
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளம் வாலிபர், காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். அதனால் காவல் துறையினரை கண்டித்து, 3000க்கு அதிகமான, பொதுமக்கள் ஒன்று கூடி சாலைமறியல் செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கீரைக்கழூர் பஞ்சாயத்தில் இருக்கும் நங்காளி கிராமத்தை சேர்ந்த முருகையநின் மகன் சுந்தர், வயது 34. உழவு வாகன ஓட்டுனராக வேலைபார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, 4 மணிக்கு, ஆலிவலம் காவல்துறையினர் ஓர் வழக்கு விசாரணைக்காக, காவல் நிலையத்திற்கு சுந்தரை கூட்டிச் சென்றனர். அன்று இரவு சுந்தரை விசாரணையின் போது அடித்து, கொடூரமாக தாக்கி காவல்துறையினர் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. கீரைக்கழூரில், கடந்த 3 மாதத்துக்கு முன், திருட்டுப்போன உழவு வாகனம் குறித்தும் சுந்தரிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
காவல்துறையினர் தாக்கியதில் மயங்கி விழுந்த சுந்தரை, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். அங்கே, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை, 1 மணியளவில் சுந்தர் இறந்து விட்டார்.
இது பற்றி, தகவல் பரவியதால், கீரைக்கழூர், நங்காளி கிராமத்தினர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் உலகநாதன் தலைமையில், திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி ரோட்டிலுள்ள விளக்குடியில் நேற்றுக் காலை, 9 மணியளவில் அதிரடியாக சாலைமறியல் செய்தனர். இந்த மறியலில், சுற்றுவட்டார பகுதியை சார்ந்த பொதுமக்கள், 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
வேதை, திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி, தஞ்சை, திருச்சி செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஸ்தம்பித்து நின்றது.
மாவட்ட கலெக்டர் நடராஜன், எஸ்.பி.,க்கள் திருவாரூர் மகேஸ்குமார், தஞ்சை தர்மராஜன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களுடன், கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் சுந்தர் சாவுக்கு காரணமான காவல்துறையினரை பணியில் இருந்து உடனே நீக்க வேண்டும். ஓட்டுனர் சுந்தர் குடும்பத்தினருக்கு, அரசு, உரிய நஷ்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனையின் போது வீடியோ எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன், மதியம், 2.30 மணிக்கு மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இன்று திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரியில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.