Man smashes daughter’s face for continuing her education in MP
பள்ளிப் படிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை தந்தையே சிதைத்த கொடூரம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள மரஞ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் உய்கே. அவரது 11 வயது மகள் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். தினேஷுக்கு தனது மகள் படிப்பது பிடிக்கவில்லை. அதனால் படிப்பை நிறுத்திவிடுமாறு கூறி வந்துள்ளார். ஆனால் சிறுமி தினேஷின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இதனால் கடுப்பான தினேஷ் கல்லை எடுத்து தனது மகளின் முகத்தை சிதைத்துவிட்டு தலையிலும் அடித்து காயப்படுத்தினார். இதையடுத்து சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு விறகு விற்கப் போகுமாறு என் தந்தை கூறி வந்தார். பல முறை நாள் முழுவதும் சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவார். நான் தொடர்ந்து படித்து வந்ததால் என்னை கொடுமைப்படுத்தி வந்தார் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் தினேஷை தேடி வருகின்றனர்.