US Tamil Children have gave sweet surprise by saying Avvai’s old poetry
அமெரிக்காவில் பிறந்த வளர்ந்த சுமார் 60 குழந்தைகள், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நடத்திய அவ்வை அமுதம் போட்டியில், அவ்வையாரின் பொன்மொழிகளை அர்த்தத்துடன் ஒப்பித்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் பிறக்கும் தமிழ் குழந்தைகள் தமிழில் பேசுவதே பெரிய அதிசயமாக கருதப்பட்ட காலம் மலையேறி விட்டது. தமிழகக் குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்கு தமிழில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள் அமெரிக்க தமிழ்க் குழந்தைகள். அமெரிக்கா முழுவதிலும் பல்வேறு தன்னார்வ தமிழ்ப் பள்ளிகள் நடைபெறுகின்றன. மேலும் தமிழ் வழியில் ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு என ஆண்டு தோறும் வகுப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழில் படிக்கும் குழந்தைகளுக்கு உயர்நிலைப் பள்ளியில் மொழிசார்ந்த மதிப்பெண்கள் பெற்றுத் தரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் தமிழ் மறைகளை ஆழமாக உணர்ந்து படித்து அதன்வழி நடக்கவேண்டும் என்பதற்காக, சாஸ்தா தமிழ் அறக்கட்டளையினர், ‘ஒரு குறளுக்கு ஒரு டாலர்’ போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இன்னமும் அதிக தமிழ் பொக்கிஷங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அவ்வையாரின் பொன்மொழிகளான ஆத்திச்சூடி, நல்வழி, மூதுரை, கொன்றைவேந்தன் ஆகியவைகளை உள்ளடக்கிய ‘அவ்வை அமுதம் ‘ போட்டி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சனிக்கிழமை நடந்த இந்த தமிழ்த் திறன் போட்டிகளில் குழந்தைகள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 8 பேர் ஆத்திச் சூடியின் 109 செய்யுள்களையும் முழு அர்த்தத்துடன் கூறி அசத்திவிட்டனர். இன்னும் 43 பேர் வெவ்வேறு ஆத்திச்சூடி செய்யுள்களைக் கூறி பரவசப்படுத்தினர்.
மூன்று வயது ஸ்ரூஜனா பதிமூன்று ஆத்திச்சூடிகளை கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்திவிட்டாள். அவளுடைய அண்ணன் 109 செய்யுளையும் கூறினான். அண்ணன் படிக்கும் போது கேட்டு கேட்டு தானும் கற்றுக்கொண்டுள்ளார். அதே வயது சண்முகவ் 7 ஆத்திச்சூடிகளை சொல்லி அசர வைத்தார். ‘அர்த்தத்தோடு ஒப்புவித்தால் மட்டும் போதுமா, தமிழில் சுயமாக மேடையில் பேசுவதற்கும் பயிற்சி வேண்டும்’ என்பதற்காக கடந்த ஆண்டு முதல் பேச்சுப்போட்டி அறிமுகப் படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு ‘அவ்வை கண்ட அன்னையும் பிதாவும்’, ‘திருவள்ளுவரும் நட்பும்’, ‘அவ்வையும் கல்வியும்’ என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. 25 குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பெரியவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டு, போட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தலைப்புகள் கொடுக்கப்பட்டன. பிள்ளைகள் பேசிக் கேட்ட பரவசமோ என்னவோ, பெற்றோர்களுக்கும் பேச்சுப் போட்டியில் ஆர்வம் தொற்றிக்கொண்டது. எழுதப் படிக்க தெரிந்தால் தானே முழுமையான மொழி அறிவாகும்… குழந்தைகள் சுயமாக எழுதும் திறனை ஊக்குவிப்பதற்காக கட்டுரைப் போட்டியும் நடந்தது. திருக்குறள் கூறும் வாய்மை, அவ்வை காட்டும் அறவழி, அவ்வையும் பெண்மையும் என்ற தலைப்புகளில் 12 குழந்தைகள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பெற்றோர்களும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க பெரியவர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடைபெற்றது, ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்து தலைப்புகள் கொடுக்கப்பட்டன.. ஆத்திச்சூடியை அனைத்து பெற்றோர்களும் அறிந்திருந்த போதிலும், அவ்வையாரின் ஏனைய படைப்புகளான நல்வழி, மூதுரை மற்றும் கொன்றை வேந்தன் குறித்து பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. பிள்ளைகளுடன் சேர்ந்து தாங்களும் கற்றுக்கொண்டு பயனடைவதாக, வெளிப்படையாகவே தெரிவித்தனர். நம் தமிழ் மொழியில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை என்று அளவுக்கு கொட்டிக்கிடக்கின்றன., தாங்கள் மீண்டும் தமிழை முழுமையாக படிக்கவேண்டும். பிள்ளைகள் வகுப்பில் இருக்கும் நேரம், பெற்றோருக்கும் சிறப்பு வகுப்புகள் ஆரம்பியுங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் சிறப்பு தமிழ் கலந்துரையாடல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அனைத்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளை டாக்டர் தீபா தலைமையில், பழநிசாமி, ஜெய்சங்கர், விவேக் மற்றும் சித்ரா ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்த் திறன் போட்டிகளைத் தொடர்ந்து வழக்கமான திருக்குறள் போட்டி பிப்ரவரி 15ம் தேதி நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளுக்கான முடிவும் பரிசளிப்பு விழாவும் பிப்ரவரி வள்ளுவர் விழாவாகக் கொண்டாடப்படும். போட்டி மற்றும் விழாவுக்கான பொறுப்பாளர் டாக்டர் ராஜ் தலைமையில் ஏராளமான தன்னார்வ தொண்டர்கள் செய்து வருகின்றனர். சிறப்பு விருந்தினராக டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சி.ஐ.ஓ (CIO) ஆக பணியாற்றிவரும் ஜெய் விஜயன் பங்கேற்கிறார். ஒருங்கிணைப்பு பணிகளை சாஸ்தா தமிழ் அறக்கட்டளை இயக்குனர்கள் வேலு ராமன் மற்றும் விசாலாட்சி வேலு செய்து வருகிறார்கள்.