Energy drinks behind substance use among teens
ஆற்றலை அதிகரிப்பதற்காக இன்றைக்கு ஏராளமான பானங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வாங்கி குடிக்கும் பானங்கள் இளைஞர்களை எளிதில் போதை பொருட்களுக்கு அடிமையாகும் ஆபத்து அதிகம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை கழகத்தின் சமூக ஆராய்ச்சி அமைப்பு ஆராய்ச்சியாளர் ஒய்வான் எம். டெர்ரி மெக்எல்ராத் தலைமையிலான ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்தன. இளைய தலைமுறையினர், ஆற்றலை அதிகரிக்க குடித்துவிட்டு கடைசியில் ஆல்கஹாலுக்கு அடிமையாகி விடும் ஆபத்து அதிகம் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். இன்றைக்கு குட்டிப்பாப்பா முதல் இளைஞர்கள் வரை ஏதாவது ஒரு ஆற்றல் பானங்களை குடித்து வருகின்றனர். இந்த ஆற்றல் அளிக்கும் பானங்கள் பயன்பாடு அமெரிக்காவின் இளைஞர்களிடம் 3ல் ஒரு பங்கு உள்ளது. இவற்றில் அதிகளவிலான கேபீன் என்ற பொருள் கலந்துள்ளது. இதனை அதிகம் பயன்படுத்தும் இளைஞர்களிடம், ஆல்கஹால், சிகரெட் அல்லது போதை பொருள் பயன்பாடும் அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உயர்நிலை பள்ளி மாணவர்கள் 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் எடுத்து கொள்ளப்பட்டன.
அவர்களில் 30 சதவீத இளைஞர்கள் கேபீன் கலந்த ஆற்றல் பானங்களை அருந்துவது தெரிய வந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 40 சதவீதத்தினருக்கும் அதிகமானோர், ஒவ்வொரு நாளும் சாதாரண பானங்களை பயன்படுத்துவதும், 20 சதவீதத்தினர் சரிவிகித பானங்களை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. ஆற்றல் பானங்களை இளைய வயது கொண்ட பெண்களை காட்டிலும், ஆண்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். டீன் ஏஜ் எனப்படும் பருவ வயதினரின் வீட்டில் பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாத நிலை அல்லது பெற்றோர் இருவரும் குறைந்த கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தால் அதிக அளவு ஆற்றல் பானங்கள் பயன்பாடு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இத்தகைய ஆற்றல் பானங்களில் சக்தியை அதிகரிப்பதற்கும், விழிப்புணர்வு அல்லது ஒருமுக நிலை ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்காக கேபீன் என்ற பொருள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. மேலும், இவற்றுடன் ஆல்கஹால் பயன்பாடும் சேர்ந்து கொள்கிறது. இதனால் ஆல்கஹாலின் நச்சு தன்மை வெளியே தெரிவதில்லை.
ஆற்றல் பானங்கள் பயன்பாடானது பிற்காலத்தில் போதை பொருள் பயன்பாட்டிற்கு கடுமையாக ஆளாகும் நிலைக்கு கொண்டு சென்று விடும் அபாயத்தை கொண்டுள்ளது. சாதாரண பானங்கள் பயன்பாடு கூட இந்த அபாயத்தை தோற்றுவிக்கும் தன்மை கொண்டிருந்தாலும், ஆற்றல் பானங்களினால் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே கதைதான் நம் ஊரிலும் நடந்து கொண்டிருக்கிறது. உயரம் வளர ஒரு பானம், மூளை சுறுசுறுப்பாக இருக்க ஒரு பானம், நினைவாற்றலுக்கு ஒரு பானம், சக்தியை அதிகரிக்க ஒரு பானம் என ஆற்றல் பானங்களிலேயே இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. சிறுவயதிலேயே நஞ்சை ஊட்டி வளர்த்து விட்டு இளைஞர்கள் ஆனபின்னர் அவர்களாகவே போதையை தேடிப்போக வாய்ப்பாக அமைந்து விடுகின்றது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.