நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒரு திருநங்கை விண்ணப்பித்து இருக்கிறார். இதன் மூலம் மதுரை தொகுதியில் போட்டியிடும் பாரதி கண்ணம்மா அரசியல் கட்சிகளின், மக்களின் கவனத்தை கவர்ந்து இருக்கிறார். அனேகமாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் இவர் இந்தியாவின் முதல் திருநங்கையாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என்ன என்று கேட்டோம் அவரிடம்.
“பல பெரிய கட்சிகள் போட்டியிடும் தேர்தல் களத்தில் நான் வெற்றி பெற்று எம்.பி.யாவேன் என்பதெல்லாம் இப்போது உடனே இயலாத காரியம் என்பதை நான் அறிவேன். எனினும் இதர பாலினத்தவர்களில் ஒருவர் போட்டியிடுவது என்பது தேர்தல் அரசியலில் நாங்களும் பங்கேற்கிறோம் என்பதை அறிவிக்கவும் ஓரளவுக்கு வாக்குகள் பெற்றாலும்கூட நாங்கள் இன்னும் வலுவாக எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையிலுமே களம் இறங்கி இருக்கிறேன் என்கிறார்.
தொடர்ந்து பேசிய பாரதி கண்ணம்மா… திருநங்கைகளுக்காக மட்டுமே குரல் கொடுப்பது தமது நோக்கம் இல்லை என்று கூறுகிறார். ஊழல் இல்லாத, வேலையின்மை இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்பதுடன் திருநங்கைகளுக்கு சொந்த வீடு வழங்க வேண்டும் என்பதும் தமது நோக்கமாக இருப்பதாக கூறுகிறார்.