Tamil Nadu comes under security blanket
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தது. இதில் குண்டுவெடிப்பு நடந்த பெட்டியில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். தமிழகத்தையே ஸ்தம்பிக்கச் செய்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப் பட்டுள்ளது. சென்னைக் குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களைத் தொடர்ந்து பலதரப்பட்ட மக்களும் அதிகம் குவியும் இடம் விமான நிலையம். எனவே அங்கு தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது. தீவிர சோதனைகளுக்குப் பிறகே மக்கள் உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர். அதேபோல், மக்கள் அதிகம் கூடும் சென்னையின் மற்ற முக்கிய இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் தீவிர சோதனை செய்து வருகின்றனர். பிரபலமான ஆலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப் படுகிறது. சென்னையைப் போலவே மற்ற மாவட்டங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள் முழுவதும் தீவிர சோதனை செய்யப்பட்டு, பயணிகளின் உடமைகளும் போலீசாரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப் படுகிறது. கன்னியாகுமரி, வள்ளியூர், நாங்குநேரி, இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தண்டவாளங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய நகரங்களில் உள்ள லாட்ஜுகளில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அங்கு சந்தேகப்படும்படியாக நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். தமிழகத்தில் உள்ள வெடி மருந்து குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். வெடி மருந்துகள் யார் யார் வாங்கிக் சென்று உள்ளார்கள்? புதியதாக நபர்கள் யாராவது வெடி மருந்து வாங்கிச் சென்று உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பழனி, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய கோவிலில் தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Tamil Nadu comes under security blanket
After the twin blasts at Chennai central railway station, the Police department has beefed-up security arrangements throughout Tamilnadu.